ஆகவே… முதுமை வெல்வீர்.!

0
369

*ஆகவே…*
*முதுமை வெல்வீர்.!*

முதியோரே!
இனி
முதுமை வெல்வீர்!!
இளமையை
வென்றுதானே
முதுமை கொண்டீர்!?

ஆகவே,
முதுமை வெல்வீர்!

இயற்கை நமக்களித்த
வரம்- ‘”முதுமை'”
முதுமை என்கிற அனுபவத்தாலேயே
முதுமை வெல்வீர்!
மீதமுள்ள காலம் உங்களுக்கானது
என்பதை உணர்வீர்!

இனி
உங்கள் செயல்
எதிர்காலத்தைப்பற்றியே
இருக்கட்டும்!

இது நாள் வரை
செய்யாமல் விட்ட செயல்களை
செய்து முடிக்க ,
காலதேவன் உங்களுக்களித்த வெகுமதிதான்
“ஓய்வுக்காலம்!”

ஓய்வு பெற்று விட்டோமே,
உண்ண உணவும்
இருக்க இடமும் போதும் எனநினைத்து
நிலைத்து விடாதீர்கள்!

மனதை ஒருநிலைப்படுத்தி
தியான நிலையில்
உங்களை நீங்களே
உற்று நோக்குங்கள்!

விருப்பத்தை உருவகப்படுத்தி
“இயற்கை” என்கிற
மாபெரும் சக்தியை
மனக்கண்ணில் உணர்ந்து
உயிர்பெறச் செய்யுங்கள்!

தோற்றப் பொழிவில்
இளமையை பொழியுங்கள்!
இதுநாள் வரை அணிந்த
இருளாடை கலைந்து
வெள்ளை உடையணிந்து
உள்ளத்தையும் வெள்ளையாக்குங்கள்!

ஒவ்வொரு வயதிற்க்கும் ஓர் அழகுண்டு
அவ்வழகை அழங்கரித்துப் பாருங்கள்!

குழந்தை ஓர் அழகு
குமரியோரழகு
இளமையோரழகு
முதுமையோரழகு
அழகிற் கழகு சேர்த்து
கிழக்கோலம் விரட்டுங்கள்!

டீ-சர்ட் அணியுங்கள்
ஜீன்ஸ் பேன்ட் போடுங்கள்!
உங்களைச் சுற்றி பார்வையை சுழற்றுங்கள்!!

இங்கேயே
இன்னும் நீங்கள்
செய்யவிருக்கும் செயல்கள்,
“ஏன் இதை செய்யாமல் விட்டாய்”_என்று
உங்களை கேட்டுக்கொண்டே இருக்கும்!

ஆ..மா..ம்
“நாம் செய்யவேண்டியவை நிறைய இருக்கின்றன”
என்பதை அறிவீர்கள்!

இதையெல்லாம் செய்ய
“தம்மிடம் வலிமையில்லை” என்கிற
தாழ்வு மனப்பான்மையை அகற்றுங்கள்!!

உங்கள் வயதைக் கடந்தவர்கள் கூட
அண்டவெளிவரைச் சென்று “முதுமைக்கு”
முற்றுப்புள்ளி வைத்ததை முகநூலில்
முகம் பதித்து முழுமையாய் பாருங்கள்!

மாற்றுத்திறனாளிகள் கூட
“மாற்றத்திற்காகவே பிறந்தோம்” என
உலக செயல்கள் பல வற்றை மாற்றி
உலக மாற்றத்தை
உருவாக்கியிருக்கிறார்கள்!

முதுமை, அந்த சவாலுக்கு சலைத்ததல்ல…

முதிர் வயதில் உதிரும் வயது- என
நினைக்காமல் மிகத்திறமையாக
செயல்படும் மனிதர்கள்
உலகின் தலைவிதியையே
தலைகீழாக மாற்றியதை
மனதிலேற்றி மறுபிறவி எடுங்கள்!

ஆகவே…
முதியோரே!
முதுமை வெல்வீர்!

உங்களுக்கான நேரம்
உங்களுக்காகவே நிறைய இருப்பதை
பயணப்படுத்த பழகிக்கொள்ளுங்கள்!

சிறிது காலத்திற்கு முன்பு வரை
நேரமில்லாமல் – நீங்கள்
படிக்க நினைத்த நூல்களை
படிக்க முடியாத சூழலில் இருந்திருப்பீர்கள்!
இப்போதிருந்தே
அவைகளை படிக்க நேரம் ஒதுக்குங்கள்!!

“கற்க நினைத்த கலைகளை
கற்க வில்லையே” என்கிற
ஏக்கமும் ஏமாற்றமும்
இருந்திருக்கலாம்!
அவைகளை
கற்கும் காலமாக்கி,
காலத்தை கையகப்படுத்துங்கள்!

இப்போதே
ஒரு புதிய நூலை
படிக்கத்துவங்குங்கள்!

இப்போதே
ஓர் இசைக்கருவியை
மீட்ட முயலுங்கள்!!

தெரியாததை சிறுகுழந்தையாய்
தேடித்தேடி (செல்போனில்)
தெரிந்துகொள்ளுங்கள்!!!

“யார் எதை கற்றுத்தருகிறார்கள்” என
தெரிவு செய்ய தேடிச்செல்லுங்கள்!
அவர்களின் நட்பை
நாகரீகமாக ஏற்றுக்கொள்ளுங்கள்!!!

கல்வியும் இசையும்-மட்டுமல்ல,
ஒரு புதிய
நட்பையும், உறவையும் உங்களுக்குள்
உயிர்த்தெழச்செய்யுங்கள்!

எந்த சூழலிலும்
உங்கள் மீது
நீங்களே
பரிதாபப்பட்டுக்கொள்ளாதீர்கள்!

உங்கள் கைகளை நீங்களே
கட்டிப்போட்டுக் கொள்ளாதீர்கள்!

உங்கள் கால்களை நீங்களே
முடமாக்கி
முடங்கிக் கிடக்காதீர்கள்!!

உங்களை மௌனமாக்கி நீங்களே
தனிமைச் சிறையில்
தள்ளிக்கொள்ளாதீர்கள்!!!

தற்கொலையைக் கூட
செய்து கொள்ளத் தூண்டுவது
“தனிமை”
ஆகவே
தனிமையை தவிர்த்திடுங்கள்!

உங்களைச் சுற்றி நடக்கும்
நிகழ்வுகளை
கவனமாக கவணியுங்கள்!

நாட்டு நடப்பை
நாள்தோரும்
நாடிப்பிடித்துப் பாருங்கள்!

நாட்டியம் பாருங்கள்!
நடனமாடுங்கள் !!

குழந்தைகளை கூட்டி வைத்து
கும்மாளமடியுங்கள்!

குட்டிக் குட்டிக்
கதைகளைக் கூறுங்கள்!

நடிப்பாலும் நடனத்தாலும்
வித்தியாசமான(மிமிக்ரி)
சப்தத்தாலும்
சிறு குழந்தைகளின்
இதயத்தை நிரப்புங்கள்!

உங்களைச் சுற்றி விதவிதமாய்
வண்ண வண்ணமாய்
வண்ணத்துப்பூச்சிகள்
வட்டமிடுவதை உணர்வீர்கள்!!

இப்படியாய்
இன்ப நெருப்பால்
இளமையை காச்சி
இதயத்திற்குள் ஊற்றி
இன்னும் பல காலம் வாழ,
உயிருக்கு
உரமேற்றிக் கொள்ளுங்கள்!

“தம்மால் இனியும்
எதையும் செய்யமுடியும்”என்கிற
எண்ணத்துள்
நம்பிக்கையை ஊற்றி தீபமேற்றுங்கள்!

உங்கள்
பருவகால நினைவுகளை
அசைபோடுங்கள்!
அது உங்களை
மீண்டும் இளமைக்கால வலிமைக்கு
கொண்டுசெல்லும்
புது மருந்தென புரிந்து கொள்வீர்கள்!!

மண்ணில்
பிறந்ததற்கான தடத்தை
மனிதர்களிடம் விதைத்துக் கொள்ளுங்கள்!!
அனுபவங்களை அவர்களிடம்
விட்டுச்செல்லுங்கள்!

ஒரு வேலை
மரணம்தான் என்றால்
மண்டியிட்டு ஏற்றுக்கொள்ளுங்கள்!!

இலைகள் உதிர்வதால் மரத்தின் மீது
வருத்தப்படுவதில்லை!

உதிர்ந்து சருகாயினும் அது
மரத்திற்கே உரமாவதாக பெருமை கொள்கிறதே,
“மரம்”
அந்த புரிதலோடு புறப்படுங்கள்!!

உலகம்
உங்கள் அனுபவங்களை
உள் வாங்கி
உயரே போகக் காத்திருக்கிறது.

உங்களால் முடியும் என்று
உலகம் நம்புகிறது!

நீங்களும் நம்புங்கள்!!

ஆம்!

யோசிப்பதற்குத்தான்
ஓய்வு காலமே தவி்ர
ஓய்வெடுப்பதற்கில்லை!

வயதிற்குத்தான்
முதுமையே ஒழிய
முதுமைக்கில்லை!!

ஆகவே…
முதுமை வெல்வீர்!!!

ஆகவே
முதுமை வெல்வீர்!!!

ஆகவே
முதுமை வெல்வீர்!!!

என்றும் அன்புடன்
கவிஞர், இயக்குனர்
பாபாஜீ

*ஆர். குணசேகரன்*

89036 19190
81247 35240

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here