தீபாவளி கவிதை- 2018

0
131

தீபாவளி கவிதை- 2018

பட்டாசு பூமியும்
மத்தாப்பு வானமும்

என் ஒற்றைப் பிள்ளை மத்தாப்பு கொழுத்தும் பொழுது மற்றவர்கள் இல்லை.

என் சிறு வயது தீபாவளி என் சிந்தனைக்குள் வந்தது.!

என் அப்பத்தா இரும்பு கடாயில் கடலெண்ணை ஊத்தி வெறகடுப்பில உக்காந்துகிட்டு,

‘மறுமகளே’. என்றழைப்பாள்.

என் அம்மா,
‘ஏன் அத்தை’
என பதிலுரைப்பாள்.

அது பாச வார்த்தைகளின் பரிமாற்றம்.
‘அத்தை’என்கிற அழகுதமிழில் அம்மா சொல்லும் மத்தாப்பு வார்த்தை கேட்டு

அப்பத்தா,

“எள்ளு போட்டு பெசஞ்சி வச்ச முறுக்கு மாவ எடுத்து தா” என்பாள்.

அம்மா குனிந்து மாவை எடுக்க,
அவள் மார்பில் இருந்த தாலி மாவுக்கு மேலே தொங்கும்.

அப்பா அதை ரசித்துப்பார்த்து புத்தாடைகளை சரி செய்வார் மஞ்சள் தடவி..

மண்குடுவையில் நல்லெண்ணையும் மத்தாப்பு, பட்டாசும் முழுநீள வாழையிலையில் உழுந்து மாவரிசி இட்லியும் விருந்துக்கு காத்திருக்கும்.

அம்மா கழுத்துல தொங்கற தாலியில சொக்கத் தங்கமாக சொந்தமெல்லாம் தொங்குவாங்க,
பெரிய அத்தை நெத்திப்பொட்டு கட்டிவிட்ட நெத்திக்காசு தாலியில தொங்கும்.
சின்ன அத்தை வாங்கித்தந்த குழல்,குண்டுமணி
பெரியப்பா,ஊரார்,உறவினர் என அத்தனை பேரின் தங்கமும் அப்பா கட்டிய மஞ்சள் கயித்த நிறச்சிருக்கும்.
அந்த கூட்டுகுடும்பமே அம்மாவின் நெஞ்சவிட்டு நீங்காம மனசுக்குள் மறைந்திருக்கும்.

பெசஞ்ச மாவ எடுத்துவந்து அம்மா, அவ மாமியார் பக்கத்துல உக்காந்து முறுக்கு பிழிவாள்

தீபாவளி முறுக்கு ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்து என் கூட்டுக் குடும்ப பிணைப்பில் ருசித்திருக்கும்.

பாதி வெந்த ச்சவ் ச்சவ் முறுக்கை பாட்டி தர,
சாமிக்கு படைக்காம திங்க கூடாது என்று பிடிங்கிடுவா அம்மா.

“கொழந்தையும் சாமிதாண்டி , குடுடி” என்று கொடுக்கச் சொல்வாள் பாட்டி.

மாவிலை ஒடிக்கப்போன தாத்தாவ காணலயே என
சித்தப்பா தேட, உப்பு வாங்க என் சித்தப்பாவ தேடுவா என் சித்தி.

அப்பா அருகில் வந்து தலையில எண்ணெய் வக்க,
அலறி அடிச்சிக்கிட்டு எடுப்பேனே நான் ஓட்டம்.
எண்ணை தேய்க்க பயந்து அல்ல
அறப்புத்தூளு கண்ணுல படுமேன்னு

குடும்பமே கூடி புடிச்சி எந்தலையில எண்ணய தடவ, எங்குட்டி மச்சானும் கூட்டத்துக்குள்ள சிக்கியிருப்பான் என் இடுப்ப இருக்கி புடிச்சிக்கிட்டு என்ன ஓடவிடாம.

விடிய காலையில எண்ணெ குளிச்சி, புத்தாட உடுத்தி வெடி வெடிச்சா தான் தீபாவளி அழகா இருக்கும்.

விடியவும் இல்ல இருட்டும் இல்ல, அது ஒரு மாதிரியான இன்ப மயமான பகலிரவு.

அப்ப வானத்துல அங்கொன்னும் இங்கொன்னுமா ஒளிக்கீற்று.
ராக்கெட் வெடி.
சீறிபாஞ்சி வெடிக்கும்.

தூரத்துல வெடிக்கிற ராக்கட் வெளிச்சம், உடனே தெரியும்.
சத்தம் மட்டும் “டுப்” என்று லேட்டா கேக்கும்.

கம்பி மத்தாப்பு, சாட்டை, புஷ்வானம், பென்சில் தான் எனக்கு சின்ன வயசுல.

வெடின்னா, லெட்சுமி வெடி, பாக்கட்டுல பிஜிலி வெடி, அழுது கெஞ்சி கேட்டு வாங்குன வெங்காய வெடி
இதுதான் என் தம்பிக்கு.

இது தான் எங்க தீபாவளி சொத்து.!

கூடத்து மூலையில மூட்டை வெடி கொட்டி கடக்கும்.

எங்களுக்கு தொடக்கூட தடா.

அத்தனையும் சித்தப்பாவோட.
அது சினேகிதிக்காக காத்துகிடக்கும்,
மூலையில காத்துகிடக்கற மத்தாப்பு மாதிரி.

எனக்கு லெட்சுமி வெடி, ராக்கட்.

சித்திக்கு கம்பிமத்தாப்பு,பாம்பு மாத்தர

குடும்பமே கூடி நின்னு மத்தாப்புக்குள்ள மாட்டிக்கிட்டு கெடப்போம்.

அப்ப பாத்து ரோட்டுக்கு ஓடுவா என் அண்ணன் மக.

“ஸ்ஸ்… அப்பா”.
என அலறல் சத்தம்.

இப்போது என் பழைய நினைவுகளை கலைத்தது அலறல் சத்தம்.

என் நினைவுகள் இப்போது கலைந்தது.

இப்ப கையை சுட்டுக்கொண்டால் என் மகள்.

அவள் கண்களில் கண்ணீர்,

என் கண்களில் பழைய ஏக்கம்.

நான் சின்ன வயசுல சுட்டுக்கிட்டப்ப குடும்பமே கூடி வந்து வாழைச்சார் பிழிந்து தடவிய தருணங்கள் இனி எப்போதும் வாராது.

ஆனால் தீபாவளி மட்டும் வந்துகொண்டேதான் இருக்கும்.

அப்போது சிவகாசி மத்தாப்புக்களை
அந்நிய பட்டாசுகள் காணாமலே செய்திருக்கும்.
என் கூட்டுகுடும்பம் காணாமல் போனதே அது போல.

இனிமே
தீபாவளி மட்டும் தான் இருக்கும்,

அன்றைய

பட்டாசு பூமியும்
மத்தாப்பு வானமும்
என்கிற நினைவுகளில் மட்டும்!

அன்புடன்,
கவிஞர், இயக்குனர்

பாபாஐீ R.குணசேகரன்

81247 35240
89036 19190 (வாட்ஸ் அப்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here